சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.580   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்

-
ஈசருக்கே அன்பானார்
யாவரையுந் தாங்கண்டால்
கூசிமிகக் குதுகுதுத்துக்
கொண்டாடி மனமகிழ்வுற்
றாசையினால் ஆவின்பின்
கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி
இனியனவே பேசுவார்.

[ 1]


சிவபெருமானுக்கே அன்பு செலுத்துபவர்கள், அடியவர்கள் எவரையும்தாம் கண்டால் கூசி, மிகவும் உள்ளத்தில் விருப்புற்று மகிழ்ந்து, ஆசையால், தாய்ப்பசுவின் பின்பு கன்று அணைவதைப் போல் சேர்ந்து, அவர்களிடம் பேசுபவை எல்லாம் இனிய சொற்களாகவே பேசுவர். *** கூசுதல் - அஞ்சுதல்: அவர்கள் பெருமையும் தம் சிறுமை யும் கண்டு அஞ்சுதல். குதுகுதுத்தல் - மீதூர்ந்த விருப்பம் கொள்ளுதல்.
தாவரிய அன்பினால்
சம்புவினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும்
படிகண்டால் இனிதுவந்து
பாவனையால் நோக்கினால்
பலர்காணப் பயன்பெறுவார்
மேவரிய அன்பினால்
மேலவர்க்கும் மேலானார்.

[ 2]


கெடுதல் இல்லாத அன்பால், சிவபெருமானை எங்கும் எவராயினும் வழிபடுவதைக் கண்டால், இனிதாய் மகிழ்ந்து, அதனால் அவர்களின் நல்ல பாவனையினாலும் அருள் நோக்கத்தினாலும் பலரும் கண்டு மகிழுமாறு பயனைப் பெறுவர். பொருந்துதற்கு அரிய அன்பின் திறத்தால் மேம்பாடு உடையவர்களுக்கெல்லாம் மேம்பாடு உடையவராய் விளங்குவர். *** தா - கெடுதல்; 'தாவில் கொள்கை' எனவரும் தொல்காப்பியமும் காண்க. பாவனை - நலம் பெறுக என எண்ணும் எண்ணம். இப்பாவனையையும் அருள் நோக்கத்தையும் பலரும் காணப்பெறுவது இவர்களுக்குற்ற தவப்பயனாகும். 'பல்லோரும் காண என்தன் பசுபாசம் அறுத்தருளி' (தி. 8 ப. 31 பா. 4) எனவரும் திருவாசகமும் காண்க.
அங்கணனை அடியாரை
ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன்
தாம்விரும்பிப் பூசிப்பார்
பங்கயமா மலர்மேலான்
பாம்பணையான் என்றிவர்கள்
தங்களுக்கும் சார்வரிய
சரண்சாருந் தவமுடையார்.

[ 3]


இறைவனையும், அப்பெருமானின் அடியவர்களையும், நிறைவுறாத பெரு விருப்பத்தினால் மேன்மேலும் பொங்கி வரும் மகிழ்ச்சியுடன் விரும்பி வழிபடுவர். தாமரை மலரின் மேல் இருக்கும் நான்முகனும் பாம்பணையின் மீது இருக்கும் திருமாலும் என்ற இவர்களுக்கும் அடைதற்கரிய திருவடிகளை அடையும் தவத்தை உடையவர்கள். *** *** எழுதவில்லை
யாதானும் இவ்வுடம்பால்
செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின்
பாலாக எனும்பரிவால்
காதார்வெண் குழையவர்க்காம்
பணிசெய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர்புகழ்க்குப்
புவனமெலாம் போதாவால்.

[ 4]


'இவ்வுடம்பினால் செயத்தகும் செயல்கள் எவையானாலும், அவை எல்லாம் ஆனேற்றுக் கொடியை உயர்த்தி நிற்கும் பெருமானின் திருவடித் தாமரைகளின் அருகில் சேரும் தகுதி உடை யன ஆகுக' என்ற அன்பினால், காதில் வெண்குழையை அணிந்த சிவபெருமானுக்குரிய பணிகளைச் செய்பவர்கள்; மீண்டும் பிறவியில் செல்ல மாட்டார்கள்; அவர்களின் புகழுக்கு இவ்வுலகும் ஒப்பாகாது. *** பாத அரவிந்தம் = பாதாரவிந்தம் - திருவடியாகிய தாமரை. கருக்குழி - பிறவியாகிய குழி.
சங்கரனைச் சார்ந்தகதை
தான்கேட்குந் தன்மையராய்
அங்கணனை மிகவிரும்பி
அயலறியா அன்பினால்
கங்கைநதி மதியிதழி
காதலிக்குந் திருமுடியார்
செங்கமல மலர்ப்பாதஞ்
சேர்வதனுக் குரியார்கள்.

[ 5]


சிவபெருமானைச் சார்பாக உடைய வரலாறுகளையே கேட்கும் தன்மை உடையவர்கள். அழகிய கண்களையுடைய இறைவரை மிகவும் விரும்பி, பிறர் அறியாத, நிலையில் செய்யும் அன்புத் திறத்தினால், கங்கையாற்றையும், பிறைச் சந்திரனையும், கொன்றை மலரையும் விரும்பி அணியும் முடியையுடைய இறைவரின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைச் சேர்வதற்கு உரியவர்களாவர். *** அயலறியா அன்பு - பிறர் அறியாத அன்பு. 'ஆர்வத்தை உள்ளே வைத்து' (தி. 4 ப. 31 பா. 4) எனவரும் திருமுறைத் திருவாக்கும் காண்க.
Go to top
ஈசனையே பணிந்துருகி
இன்பமிகக் களிப்பெய்திப்
பேசினவாய் தழுதழுப்பக்
கண்ணீரின் பெருந்தாரை
மாசிலா நீறழித்தங்
கருவிதர மயிர்சிலிர்ப்பக்
கூசியே யுடல்கம்பித்
திடுவார்மெய்க் குணமிக்கார்.

[ 6]


சிவபெருமானையே வணங்கி, உள்ளம் உருகி, அதனால் உள்ளத்து எழும் இன்பம் மிகுதலால் மகிழ்ச்சி அடைந்து, சொல் குழறி, மார்பில் விளங்கும் திருநீற்றைக் கண்களிலிருந்து இழிந்து வரும் நீரானது அழித்து அருவியென வழியவும், மயிர்க் கூச்செறியவும், கூசி உடல் நடுங்குவார்கள்; மெய்ம்மைக் குணம் நிறைந்த பத்தர்கள் ஆவர். *** உடல் நடுங்குதல்- அன்பு மிகுதியால் ஏற்படும் மெய்ப்பாடுகளுள் ஒன்று. 'மெய்தான் அரும்பி' எனவரும் திருவாசகமும் காண்க.
நின்றாலும் இருந்தாலும்
கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும்
விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம்
ஒருகாலும் மறவாமை
குன்றாத வுணர்வுடையார்
தொண்டராம் குணமிக்கார்.

[ 7]


நின்றாலும், அமர்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும், நடந்தாலும், உண்டாலும், உறங்கினாலும், இமைத்தாலும், பேரவையில் ஆடும் கூத்தப்பெருமானின் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் வணங்கி ஒருபோதும் மறவாத பேரன்பால், குறைவில்லாத உணர்வை உடையவர்கள்; திருத்தொண்டர்கள் எனப்படும் குணத்தால் சிறந்தவர்கள். *** 'தொண்டர் அடித் தொழல்பூசைத் தொழில் மகிழ்தல் அழகார்
துளங்கிய அர்ச்கனைபுரிதல் தொகுதி நியமங்கள்
கொண்ட பணி திருவடிக்கே கொடுத்தல் ஈசன்
குணம் மருவும் அருங்கதையைக் குலவிக் கேட்டு
மண்டி விழி துளும்பல்மயிர் சிறும்பல் உன்னல்
மருவுதல் பணிகாட்டி வருப வாங்கி
உண்டி கொளாது ஒழிதல்என இவையோர் எட்டும்
உடையர் அவர் பத்தர்என உரைத் துளோரே'
எனவரும் திருத்தொண்டர் புராண சாரத்தால் (பா. 83), இவ்வெண் குணங்களும் இப்பத்தர்கள் பால் உளவாதலை இவ்வேழு பாடல்களானும் அறியலாம். இவ்வேழு பாடல்களும் பழைய ஏடுகளில் இல்லை என்பர் சிவக்கவிமணியார்.

சங்கரனுக் காளான
தவங்காட்டித் தாமதனால்
பங்கமறப் பயன்துய்ப்பார்
படிவிளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர்
ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கிஎழுஞ் சித்தமுடன்
பத்தராய்ப் போற்றுவார்.
]" 59

[ 8]


சிவபெருமானுக்கே அடிமையாகிய தவத்தை மேற்கொண்டு, உலகிற்கு அதனை விளக்கித், தாம் அதனால் குற்றம் நீங்கிய பயனைப் பெறுவர்; உலகை விளங்கச் செய்யும் பெருமையை உடையவர்; அங்கணராய சிவபெருமானைத், திருவாரூர் ஆளும் இறைவரின் திருவடிகளை வணங்கி, மேன்மேலும் எழும் பத்திமை உறைப்புடைய பத்தராய் விளங்குவர். *** தவம் காட்டி - சிவப்பொலிவும், சிவவழிபாடும் உடையவராய் விளங்குதலால் அவ்வன்பினை வெளிப்படுத்தும் திறம்மிக விளங்குதல். பயன்துய்ப்பார் - சிவானுபவத்தைப் பெற்றவாறிருப்பர்.
தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்.
]" 60

[ 9]




Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song